தமிழக அரசு சார்பாக தமிழ்நாடு நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. 1956-ம் ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்கள், மொழிவாரி மாநிலங்களாக உருவாக்கப்பட்டு இன்றைய தமிழ்நாடு உருவான நாள்தான் நவம்பர் 1. இந்த நாளை கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன.
தமிழ்நாடு நாள் என நவம்பர் 1-ந் தேதி கொண்டாட வேண்டும் என்று தமிழறிஞர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை ஏற்று நவம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து இன்று தமிழ்நாடு நாள் விழா தமிழக அரசால் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைமைச் செயலக கட்டிடம் மின்விளக்குகளால் ஜொலித்து கொண்டிருக்கிறது. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். மேலும் மாநிலத்தில் பல இடங்களிலும் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது. மேலும் தாய் தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த நாளும் இன்றுதான். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைக்க மிகப் பெரிய போராட்டம் நடந்தது. இதனையடுத்து தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைந்தது. இதனை கொண்டாடும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் வாழ்த்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தமிழ்நாடு நாள் வாழ்த்து: தமிழர்களை பெருமைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்ட நவம்பர் 1ஆம் நாளான இப்பொன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் "தமிழ்நாடு தின" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.
இத்தினத்தில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை உலக அரங்கில் உயர்த்தும் விதமாக, மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதற்காக போராடிய சங்கரலிங்கனார் உள்ளிட்ட தலைவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்ந்து போற்றுவோம்.
இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
தமிழக அரசு சார்பில் முதல் முறையாக தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்