துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
தமிழகத்தில் தொழில்துறை அபரிதமான வளர்ச்சியைப் பெற, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அமல்படுத்தப் பட்டுள்ளதுடன், ஏராளமான சலுகைகளும் வழங்கப்படுகின்றன. மேலும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. தமிழகத்தில் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள், கட்டமைப்பு, மனித வளம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை விரிவாக எடுத்துக் கூறி முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆகஸ்ட 28ம் தேதி வெளிநாட்டுப் பயணத்தை தொடங்கினார்.
துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா என 15 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர், அந்தந்த நாடுகளில் தொழில் அதிபர்களைச் சந்தித்தது, தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்புத் தொடர்ந்தார். இருதரப்புஇடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடு செய்ய, பிரபல நிறுவனங்கள் முன்வந்து, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
வரும் 7-ம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்க புறப்படும் பன்னீர்செல்வம் 10 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். சிகாகோ, வாஷிங்டன், ஹூஸ்டன் ஆகிய நகரங்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப்புற வளர்ச்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட முக்கிய துறைகள் ஓ.பி.எஸ் வசம் உள்ளது.
இதன் காரணமாக அமெரிக்க சுற்றுப்பயணத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஓ.பி.எஸ். ஆய்வு செய்கிறார். துணை முதலமைச்சருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் செல்வதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் கடந்த ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதி 14 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்
அமெரிக்கா செல்கிறார் துணை முதல்வர்